ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாஜக இதுவரை இல்லாத அளவிற்கு கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பையே எதிர்நோக்கி வரும் பாஜகவுக்கு இந்த வெற்றி மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு முறை போராட்டம் நடைபெறும்போது எழுப்பப்படும் முழக்கம் இங்கு தாமரை மலரவே மலராது என்பதுதான். அதை மெய்ப்பிக்கும் விதமாக கடந்த சட்டமன்ற இடைத் தேர்தலிலும் சரி, தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் சரி. பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. அதே கதைதான், ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என கூறப்பட்ட நிலையில், அதை பொய்யாக்கியுள்ளது தேர்தல் முடிவு.

கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கைகோர்த்துவிட்ட நிலையில், பாஜகவுடன் இனி ஒருபோதும் கூட்டணி இல்லை என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, ஆணித்தரமாக கூறிவிட்டார்.

இதனால், அப்போது தனித்து களம் கண்ட பாஜக, 29 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளையும், 4 மாவட்ட கவுன்சிலர் இடங்களையும் பெற்றது. ஆனால், இந்த முறை அதிமுக உடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக, கணிசமான இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின் படி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 87 இடங்களில் வெற்றிபெற்றுள்ள பாஜக, மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 6 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.

இதன்மூலம் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக, அதிமுக, காங்கிரஸ் வரிசையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் 6வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ள பாஜக, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலிலும் 6வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இந்த வெற்றி எதிர்க்கட்சிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், பாஜகவினருக்கே ஆனந்த அதிர்ச்சியைத் தான் கொடுத்துள்ளது.